அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் சாங்கீதா, வருவாய் கோட்ட அலுவலர் ஷாலினி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநில இளைஞரணி துணை செயளாலர் ராஜா, திரைப்பட நடிகர் விமல், மற்றும் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1100 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் தங்கநாணயம், சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதி சான்று வழங்கிய வீரர்கள் 50பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர்.


பேருந்து வசதிபொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இடையே டிஜே நவீன இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this to your Friends