காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.மாநகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ராஜாஜி காய்கறி சந்தையினை பார்வையிட்டு அங்குள்ள குடிநீர் வசதி,கழிப்பிட வசதிகள் ஆகியன குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார்.
காய்கறிச் சந்தையினை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுரை கூறினார்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மாநகராட்சி அலுவலகத்துக்கென ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு மருந்துகளின் இருப்பு விபரங்களையும்,அப்பகுதியில் இருந்த நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு பொருட்கள் இருப்பு விபர பதிவேடையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் பா.ஜெயஸ்ரீ,பொறியாளர் கணேசன்,ராஜாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் கேபிடி மோகன், செயலாளர் முரளி,பொருளாளர் சரவணன்,தலைவர் நியானவேல்,துணை செயலாளர் ஜிகே வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.