அரியலூர், அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், இன்று மாலை நடைபெற்ற அச்சங்க பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

தூய்மைப் பணியாளர்களுக்கு, வழங்க வேண்டிய கரோனா ஊக்கத் தொகையை வழங்கிட வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி அமல்படுத்த வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்து பேசினார். துணைத் தலைவர் ஆர்.தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பி.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், சுகாதார ஊக்குநர்கள், நீர்தேக்கத் தொட்டி பம்பு ஆப்ரேட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends