புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி அறிவியல் கண்காட்சிக்கு நடுவராக செயலாற்றினார். இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து தேசிய அறிவியல் தினம் குறித்து பேசும்பொழுது

தமிழகத்தின் இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், 1928-ம் ஆண்டு ராமன் விளைவு என்ற அறிவியல் கோட்பாட்டை வரையறுத்தார். இந்திய இயற்பியல் ஆய்விதழில் 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ‘ஒரு புதிய கதிர்வீச்சு’ என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த புதிய கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது கண்டுபிடிப்பை கவுரவிக்கும் வகையில், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய அறிவியல் தினம் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது, இதை தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில் (NCSTC) முன்மொழிந்தது. 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு வழிவகுத்த சி.வி. ராமனின் புரட்சிகர கண்டுபிடிப்பை இந்த நாள் கொண்டாடுகிறது. மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படும்போது ஒளி அலைநீளத்தில் மாற்றப்படும் ராமன் விளைவு அல்லது நிகழ்வு, நிறமாலையியல் மற்றும் பொருள் அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கிறது,

இது உலகளவில் அறிவியலை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது இந்த ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினம் இன்று (28.2.2025) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள் ‘வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்காக அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல் என்பதாகும் என்று பேசினார்.

அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் ஊட்டச்சத்து வகைகள், இயற்பியல் திராசு, உடைக்கும் பலூன், மின்காந்தம், மின்னோட்டம் உருவாகுதல், மின் இயக்கு விசையை எவ்வாறு செயல்படுகிறது, தொடர் இணைப்பு பக்க இணைப்பு, மின் மோட்டார் தத்துவம், அடர்த்தி உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் சோதனை செய்திருந்தார்கள்.

அறிவியல் பாடல்கள் ரியா மேரி நித்யஸ்ரீ கிருஷ்டிகா தரணிகா உள்ளிட்டோர் அறிவியல் பாடலின் தலைப்பில் பாடல்கள் பாடினார்கள். ஷிவானி சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக்கூடிய வகையில் உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக ஆங்கில ஆசிரியர் சிந்திய, அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் மணிமேகலை, வெள்ளைச்சாமி, ஹில்டா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழக்கினார்கள். கல்வி வானொலியில் கலந்துகொண்டு தேசிய அறிவியல் தினம் குறித்து பேசிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அனைவரும் சர் சி வி ராமன் முக கவசம் அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அதுபோல கந்தர்வக்கோட்டை ஒன்றியம் பெருச்சு வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்ன ராஜா தலைமையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *