தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மாணவர்களுடன் கலந்துதுரையாடினார் .
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிதிமன்ற நீதிபதியுமான கலைநிலா மாணவர்களிடம் பேசுகையில்,நம்முடைய வாழ்க்கையில் குழந்தைப் பருவம் தான் மிக முக்கியமான பருவம். சட்டம் என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமானது.
நாம் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக இருக்ககுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் , அவர்களாகவே முதலில் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் பிரச்சனை ஏற்பட்டால் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு 6 முதல் 14 வயது வரை கட்டாயம் கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு மேல் மாணவர்கள் தாங்களாகவே முயன்று விருப்பத்துடன் படிக்க வேண்டும் மாணவப் பருவத்திலேயே நம்முடைய லட்சியத்தை நோக்கி ஒரே குறிக்கோளுடன் அந்த லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து படிப்பை பற்றிக்கொண்டு மற்ற நல்ல விஷயங்களையும் அறிந்து கொண்டு அனைவரிடமும் கலந்துரையாட வேண்டும்.
ஆசிரியர்களும் தாய், தந்தை தான். அவர்கள் சொல்வதைக் கேட்டு மாணவர்கள் அதன்படி நடக்க வேண்டும். நாம் படித்து நல்ல பதவியில் இருப்பது நம்முடைய பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமையை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தை பருவத்தில் நாமாக ஒரு முடிவு எடுக்க கூடாது. ஆசிரியர்களிடம் தெரிவித்து அவர்களிடம் முடிவு கேட்கவேண்டும் ஆண்களால் பெண்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அது பெண்களை மட்டும் பாதிக்காது. ஆண்களையும் , அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும்.
எனவே நீங்கள் அனைவரும் முடிந்த அளவு நல்லவற்றையே செய்ய வேண்டும். நம்முடைய பக்கத்து வீடுகளில் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ வட்ட சட்டப்பணிகள் குழுவில் தெரிவித்து இலவச ஆலோசனை பெறலாம்.
முதலில் சமரசமாக போவதற்கு தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதிலேயே சுமுக தீர்வு காணவும் நாம் முயற்சிக்கலாம். அதை தாண்டி தான் நாம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.
மாணவர்கள் 18 வயதிற்குக் கீழ் வாகனம் ஓட்டக் கூடாது. அவ்வாறு வாகனம் ஓட்டினால் அது நமது பெற்றோரையே பாதிக்கும்.
எனவே 18 வயதிற்கு பிறகு லைசன்ஸ் எடுத்த பிறகுதான் வாகனங்கள் ஓட்ட வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 1031 என்கிற எண்ணை எப்பொழுது வேண்டுமானாலும் நாம் அழைக்கலாம்.
குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க வேண்டும்.உங்கள் அருகாமையில் இது போன்று நடந்தால் தகவல் தெரிவித்து அதனை தடுத்து நிறுத்த வேண்டும். ஆண் ,பெண் இருவருக்கும் அரசு கூறி உள்ள வயதுக்கு வயதுக்கு கீழ் திருமணம் நடக்க கூடாது .
எப்போதுமே நாம் நமக்கும் நன்மை செய்து கொள்ள வேண்டும். பிறருக்கும் நன்மையே செய்ய வேண்டும் நமக்குத் தெரிந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து கூற வேண்டும். அப்பொழுது தான் நாம் பெற்ற கல்வி அனைவருக்கும் பயன்படும். நாம் கேட்கும் தகவல், படிக்கும் தகவல், பள்ளியில் படிக்கும் தகவல்கள் அனைத்தையும் மற்றவருக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.கலந்துரையாட வேண்டும்.
நமக்குத் தெரிந்தவற்றை தைரியமாக அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் . நாமும் தைரியமாக கேள்விகள் கேட்க வேண்டும். அருகில் உள்ளவருக்கு தானே இந்த பாதிப்பு ஏற்பட்டது. நமக்கு என்ன என்று நாம் இருக்கக்கூடாது. அவர்களுக்காகவும் நாம் உரிமையை கேட்க , கேள்விகள் கேட்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் நல்ல முறையில் கல்வியைக் கற்று ,உங்களுக்கு தேவையான தகவல்களை உங்களுடன் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து அடையும் . வாழ்த்துக்கள் என்று பேசினார்.
தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வலர் வித்யா நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.