அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தில் வரலாறு மீட்பு குழு சார்பில் பிறந்தநாள் முதல் இன்று வரை மது மற்றும் போதைப் பழக்கம் இல்லாத 133 நபர்களுக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர்(பொ) அமுதா அவர்கள் பேருக்கு மாமனிதர் விருது வழங்கினார்.

வரலாறு மீட்புக் குழு சார்பில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி தன் வாழ்நாளில் மது அறியா மாண்பாளர்கள் 12 மணி நேரத்தில் இணையவழியாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய அழைப்பு விடுத்தனர். அழைப்பு விடுத்த சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வரப்பெற்று அவற்றை முறையாக ஆய்வு செய்து ஏப்ரல் 27 ம் தேதி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரையாளர்கள் மற்றும் விருதாளர்களுக்கு பச்சை துண்டில் பரிவட்டம் கட்டி பாரம்பரிய இசை கருவிகளான பறை இசை தவில் மேள தாளத்துடன் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) அமுதா அவர்கள் கலந்து கொண்டு முதல் பரிவட்டத்தை ஏற்றுக்கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பாரம்பரிய உடையில் ஆண்கள் வேட்டி சட்டை மற்றும் பெண்கள் பருத்தியால் ஆன புடவை கட்டி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் டெல்லி, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழகத்தில் உள்ள அரியலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக கம்பீரத்துடன் வந்தனர்.

ஊர்வலம் முடிகொண்டான் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வந்த போது வானம் மழை பொழிந்து வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழா துவங்கும் முன் முடிகொண்டான் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பரதநாட்டியத்துடன் வரவேற்பு நடனம் யோகா வள்ளுவப்பா உள்ளிட்ட பறை இசையுடன் நிகழ்வு துவங்கியது.

பச்சை மனிதர் மருத்துவர் தங்க சண்முக சுந்தரம் எழுதிய சுழியத்திற்குள் எண்களும் எழுத்துக்களும் என்ற நூலினை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) அமுதா வெளியிட்டார்.

முதல் பிரதியை மீனாட்சி இராமசாமி கல்லூரி நிறுவனங்களின் தாளாளர் இரெகுநாதன்,
ஏகேஎம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கதிர் கணேசன் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக அரிய வகை கையெழுத்து ஓலைச்சுவடி துறை இணைப்பேராசிரியர் ஆதித்தன் வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொ) சேகர் அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறை பேராசிரியர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

நூலைப்பற்றிய பகுப்பாய்வினை அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறை பேராசிரியர் தமிழ்மாறன் எடுத்துக்கூறி பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களை எளிதாக எழுதிட உதவும் நூல் ஊக்குவிக்கும் முறைகளை கொண்டது என கூறினார். தொடர்ந்து தன் வாழ்நாளில் மது போதை பழக்கங்கள் இல்லா மாண்பாளர்கள் 133 பேருக்கு மாமனிதர் விருது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) அமுதா அவர்களால் வழங்கப்பட்டது. மாமனிதர் விருது பெற்ற அனைவருக்கும் பச்சை நிற பருத்தி துண்டினால் பரிவட்டம் கட்டப்பட்டு மாமனிதர் பதக்கம், கல் உரல், பருத்தியால் ஆன துணிப்பை ஆகியவையும் வழங்கப்பட்டது.

பின்னர் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி பேரன் மதன்குமார், கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி மனைவி கமலத்தம்மாள், நேதாஜி சுபாசு சந்திரபோசு தலைமையிலான இந்தியா விடுதலை பெற போராடிய இந்திய தேசிய இராணுவப்படை சேர்ந்த தியாகிகள், திருச்சி மாவட்டம் சீதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி குடும்பத்தினருக்கு,நாமக்கல் கவிஞர் குடும்பத்தினருக்கு,
தியாகி சுப்பையா குடும்பத்தினருக்கு, புவியியல் அறிஞர் செம்பியக்குடி சந்திரசேகர்,
உள்ளிட்ட 71 பேருக்கு செம்பியன் மாதேவி பேராளுமை விருது,

மாமன்னன் இராசராசன் இராசேந்திரன் மண் காப்பாளன் விருது, அரணாளன்விருது, வழங்கப்பட்டது.100 சதவீதம் நெகிழிப் பயன்பாடில்லாத உலகை படைக்க விழாவில் கலந்து கொண்ட விருதாளர்கள் அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.

மேலும் ஆயிரம் லிட்டர் மழை நீர் குடிநீராக வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீரக சம்பா அரிசியில் காய்கறி உணவு வழங்கப்பட்டது. மேலும் காலை உணவாக கேழ்வரகு கூழ் முளைகட்டிய பயறு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பச்சை மனிதர் மருத்துவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். விழாவிற்கு செங்கை சிலம்பு பேராசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்புரை ஆற்றினர். விழாவில் சோபனா பன்னீர்செல்வம் முகுந்தன் பொறியாளர் கார்த்திகேயன் நன்றியுரையாற்றினர்.
இந்நிகழ்வினை நெறியாள்கை திருப்பதி ஆசிரியர் செங்குட்டுவன் மற்றும் வைஜயந்தி அவர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்வில் வரலாறு மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர்கள் வரதராசன் ஈரோடு தவசிமணி தஞ்சை மகேசுவரி திருச்சி விஜயகுமார் வீரமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share this to your Friends