நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
67 ஆண்டுகள் பழமைவாய்ந்த வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா போராட்டம் ; 83 மாதங்களாக சேமநலநிதி, 5 மாதங்களாக முறையான ஊதியம் கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை என வேதனை…
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது நாகப்பட்டினத்தில் 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி மிகவும் பெயர்பெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்த தொழில்நுட்பக் கல்லூரியில், 96 பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 31 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிவதால் கடும் சிரமத்திற்கு மத்தியில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன், பேராசிரியர்களுக்கு 83 மாதங்களாக பிடித்தம் செய்யப்படும் சேமநலநிதியும் அரசு கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுனர். கல்லூரியில் உள்ளே சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்தபடி பேராசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
5 மாதங்களாக ஊதியம் வழங்காத காரணத்தினால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், அன்றாட தேவைகளுக்கே அல்லல்படுவதாகவும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மாதாமாதம் கடைசி தேதியில் ஊதியம், பிடித்தம் செய்யப்பட்ட சேமநல நிதி சந்தா தொகையை வட்டியுடன் செலுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழமை வாய்ந்த கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கும் சூழல் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் , பணியாளர்களுக்கு ஊதியத்திற்காக அனுப்பப்படும் மான்யம் 90 சதவீதத்திற்கு பதிலாக 100 சதவீதத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும், ஊதியம் , சேமநல நிதி சந்தா செலுத்துதல் போன்ற இனங்களை கருவூலம் மூலம் செலுத்த வழிவகை செய்துதர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.