கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக வானொலி தினம் குறித்து பேசும் பொழுது
நவீன தகவல் தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பிருந்தே, மக்கள் தொடர்பு ஊடகத்தின் முன்னோடியாக வானொலி இருந்து வருகிறது.
வானொலியை பொறுத்தவரையில் மின்வசதி கிடைக்கப்பெறாத பகுதி, மலை கிராமங்கள் என்று அனைத்து இடங்களிலும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. பேரிடர் காலங்களிலும் தடையின்றி இயங்க கூடியது வானொலி.
தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிக பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.
‘ரேடியோ’ என்ற வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது 1890 ம் ஆண்டு தான். பிரெஞ்சுக்காரர் எட்வார்ட் பிரான்லி இந்த வார்த்தையை பயன்படுத்தினார். நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் இத்தாலி நாட்டின் குலீல்மோ மார்க்கோனி ஆவார்.
‘கம்பியற்ற தகவல்தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியவர் இவரே. முதல் வானொலி ஒலிபரப்பு மே 13, 1897 அன்று குலீல்மோ மார்கோனியால் செய்யப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக 1909 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்ன்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து அவர் பெற்றார்.
மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்த பின்னர் 1922 ம் ஆண்டு வானொலி ஒலிபரப்பு இங்கிலாந்து நாட்டில் பரிசாத்த முறையில் துவக்கப்பட்டது. அதற்கு பிறகு 1923 ம் ஆண்டு இலங்கையில் தான் பரிசாத்த முறையில் வானொலி ஒலி பரப்பு துவங்கியது. அதனை துவக்கிய குழுவின் தலைவராக இருந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அய்யம் நடராஜம் எனும் தமிழர். இவர் மார்க்கோனியிடம் பயிற்சி பெற்றவர்.
இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு 1924 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி சென்னையில் மெட்ராஸ் பிரசிடென்சி ரேடியோ கிளப் மூலம் தொடங்கியது. 1927 ஆம் ஆண்டு மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
முதல் வானொலி நிகழ்ச்சிகளை ரேடியோ கிளப் ஆப் பாம்பே என்ற தனியார் நிறுவனமே தயாரித்து, நிர்வாகம் செய்து வந்தது. முதன் முறையாக ஒரு நிலையத்தில் இருந்து இன்னொரு நிலையத்திற்கு அஞ்சல் செய்யும் நிகழ்ச்சியை 1939 ம் ஆண்டு ஜனவரி 18 ல் டெல்லி வானொலி நிலைய நிகழ்ச்சியை பம்பாய் நிலையம் அஞ்சல் செய்தது. 1936 ஆம் ஆண்டில் இருந்து வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது.
வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் இதே நாளில்தான் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. அதனால், அந்த தினம் உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 13, 2025 அன்று கொண்டாடப்படும் உலக வானொலி தினம், வானொலி மற்றும் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் வானொலி நிலையங்களின் பத்திரிகை செய்திகளை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.என்று பேசினார். நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.