தஞ்சாவூர், தஞ்சை புதுக்கோட்டை சாலை ஆர்.ஆர்.நகர் அருகே தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செங்கோல் ஹாலில் தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சாவூர் மாநகரம் மற்றும் தஞ்சாவூர் மத்திய ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாநகர செயலாளர் வழக்கறிஞர் சரவணன் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.அந்த தேர்தலை அதிமுக வலுவாக சந்திக்க உள்ளது. அதில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல் அமைச்சர் ஆவார்.

அதற்கு தஞ்சை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெறவேண்டும். அதற்கு அதிமுகவினர் மனமாட்சர்யங்களை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒரு இயக்கம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதைபேசித் தீர்வு காணலாம். அதுவும் மக்கள் இயக்கமான அதிமுகவில் இருக்கலாம்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நாம் அனைவரும் அண்ணன் தம்பதிகள் என்ற உறவோடு இருக்க வேண்டும். நாளை ஆட்சிக்கு வரப்போகிற இயக்கம் அதிமுக. அதனால் நமது நோக்கம் களைந்து விடக்கூடாது. திமுக ஆட்சி தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றில் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எடப்பாடி ஆட்சி பரவாயில்லை என்று மக்கள் பேசுகின்றனர்.‌ தேர்தல் வாக்குறுதிகளை நம்பி திமுக வுக்கு வாக்களித்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சி 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போது அண்ணா முதல் அமைச்சர். அவரது மறைவுக்குப் பின் 1969-ஆம் ஆண்டு கருணாநிதி முதல் அமைச்சர் ஆனார். 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ந்து 2 முறை தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை.

ஆனால் முதல் அமைச்சர் எம்ஜிஆர் தொடர்ந்து 3 முறை தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெயலலிதா 2011.2016 ஆகிய இரண்டு தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். அதனால் வருகிற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். அதற்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும். அதற்கு 9 பேர் அடங்கிய பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் காந்தி கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம் அம்மா பேரவை இணைச் செயலாளர் அறிவுடைநம்பி விவசாய அணி இணைச் செயலாளர் கு.ராஜமாணிக்கம் துணை செயலாளர் சிங்.ஜெகதீசன் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் துரை.வீரணன் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சாபிகேசன், புண்ணியமூர்த்தி, சதீஷ்குமார், மனோகர், மாநகராட்சி உறுப்பினர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, கலைவாணி சிவகுமார், காந்திமதி நவநீத கிருஷ்ணன் அதிமுக நிர்வாகி கேபிள் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மத்திய ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் நன்றி கூறினார்.

Share this to your Friends