சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா.500 க்கும் மேற்பட்டோர் பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் முருகப்பெருமான் பழனி ஆண்டவராக தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

சித்தமருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோவிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டை என்னும் பிரசாதத்தை உண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்து.

கோவிலில் இருந்து பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் வேலுடன் ஆட்கொண்ட விநாயகர் கோவிலின் அருகே எழுந்தருள திரளான பக்தர்கள், பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து கோவிலின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். வீடுகள் தோறும் பழனி ஆண்டவருக்கு பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 500 க்குக் மேற்பட்ட பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! என கோஷம் எழுப்பி பக்தி பரவசத்தில் காவடியுடன் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக காவடியாட்டத்துடன் நான்குரத வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

Share this to your Friends