காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர்
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கரூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தாராபுரம் வருவாய் கோட்டாச்சியர் திரு.ஃபெலிக்ஸ் ராஜா தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் முன்னிலையில் விழாவை துவங்கி வைத்தனர்.
தழிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் இது போன்ற நிகழ்வுகளை மாவட்ட அளவில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின்படி இது போன்ற நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகிறது. மேலும் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை பணிகளை செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளுக்கு பம்ப் செட்களுக்கு கட்டணமில்லா மின்சாரம், பயிர் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் என விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கினார். அந்த வகையில் பல நல்ல திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் விதை கிராமத் திட்டம் உட்பட 15க்கும் மேற்பட்ட திட்டங்கள் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் உபகரணங்கள் வழங்குதல்
அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டம் – ஆடா தொடா நொச்சி நாற்றுகள், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் – பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களையும் அமைச்சர்கள் வழங்கினர். மேலும் தென்னையில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, தென்னங்கன்றுகள் நடவு முறைகள், ஊடுபயிர்கள் சாகுபடி, நீர் மற்றும் உரம் மேலாண்மை முறைகள் குறித்த கையேடு மற்றும் சிறுதானிய கையேடுகளை மு.பெ. சாமிநாதன் மற்றும் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
காங்கயம் நகர செயலாளர் வசந்தம் நா. சேமலையப்பன், ஒன்றிய செயலாளர் கே.கே. சிவானந்தன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், நகர மன்ற தலைவர் ந. சூரியபிரகாஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தர வடிவேலு, மண்டல இணை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை சோ.ஷீலா பூசலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குநர் (காங்கயம்) து. வசந்தாமணி, வேளாண்மை உதவி அலுவலர் ஸ்ரீனிவாசன், வேளாண் விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.