திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார்.
பொறுப்பேற்ற பின்னர், புதிய ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- “தொன்மை வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என, பல்வேறு நிலைகளில், தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள எனக்கு, முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். பொதுமக்களின் குறைகளை இன்முத்துடன் கேட்டு பணிபுரிய வேண்டும்.
அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்கள் ஆகியவற்றின் மீது, சிறப்புக்கவனம் செலுத்தி,அவற்றிற்கு விரைந்து தீர்வு காணும்படியாக பணியாற்றிட வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகள், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான காலை உணவுத்திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணத்திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மைக்காக்கும் 48 திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான திட்டங்களுக்கும், அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்! என்று முதலமைச்சர், அறிவித்தியுள்ளார்.
அந்த அறிவுரைகள் அப்படியே பின்பற்றப்படும்! அத்துடன் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட நிர்வாகமானது, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடனும், ஒருங்கிணைந்து செயல்படும். ஒவ்வொரு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, பணிகளில் சுணக்கம் இருப்பின், நேரடியாக கள ஆய்வு செய்து, உடனடியாக குறைகளை சரி செய்து, குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் அவற்றை முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்!”-
இவ்வாறு, திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் இரா.சுகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [பொது] காசி ஆகியோர், உடனிருந்தனர்.