மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி – சர்டை அணிந்தபடி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கால்டாக்ஸ் பகுதியில் தொடங்கிய மாரத்தான் ஓட்ட போட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரம் மணக்குடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் பூர்ணிமா மற்றும் டிஎஸ்பி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.