தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
இந்தியாவில் உள்ள பசிலிக்கா என்று அழைக்கப்படும் கத்தோலிக்க கிறிஸ்துவ பேராலயங்களில் பூண்டிமாதா பேராலயம் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் பெருவிழா மே 6ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆண்டு பெருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாலை பக்தர்களின் செபம் மற்றும் தாராள பொருள் உதவியால் புதியதாக கட்டப்பட்டுள்ள நற்கருணை சிற்றாலயம் மற்றும் திருப்பொருள்கள் வைப்பதற்கான கட்டடத்தை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் புனிதம் செய்து திறந்து வைத்தார்.
பின்னர் பூண்டிமாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இறைபாடல்களுடன் சுமந்து வந்தனர். மாதாவின் திருஉருவம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பக்தர்கள் முன் சென்றனர். கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பிஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன் அந்தோனிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் எஸ். ஆல்பர்ட் சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.ஜான்கொர்னேலியுஸ், எஸ்.ஜெ.செபாஸ்டின், ஆன்மீக தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோஸப்மற்றும் சுற்றுவட்ட பங்கு தந்தையர் பங்கேற்ற ஊர்வலம் பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தது. கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் கொடியை புனிதப்படுத்தி 6.30 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
கூடியிருந்த மக்கள் “மாதாவே வாழ்க, பூண்டி அன்னையே வாழ்க” என்று கோஷமிட்டனர். பின்னர் மாதா அரங்கத்தில் நடைபெற்ற திருப்பலி பூசையில் ஆயர் மறையுரையாற்றி அருளாசி வழங்கினார். கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
தொடர்ந்து 13ஆம் தேதிவரை நவநாட்கள் திருப்பலியை அருட்தந்தையர்கள் நிறைவேற்றுகின்றனர். விழாவின் சிறப்பு அம்சமாக 14-ஆம் தேதி காலை பூண்டிமாதா பேராலய முன்னாள் பங்கு தந்தையர் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவுத்திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 6.00 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை ஏற்று கூட்டுப் பாடல் திருப்பலி மறையுரையாற்றி ஆசிவழங்கி, இரவு 8.30- மணிக்கு மாதாவின் ஆடம்பர அலங்காரம் தேர்பவனியை புனிதப்படுத்தி துவக்கி வைக்கிறார்.
இரவு வாண வேடிக்கைகள் நடைபெறும். 15ஆம் தேதி காலை 6-மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழாத்திருப்பலியும், மாலை கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பிஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன் அந்தோனிராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.