தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், மே- 7. தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர்
வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.

தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசுப் புதிய தேர் செய்து கொடுத்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.


இதில், 15 ஆம் திருநாளான புதன்கிழமை காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.திருத்தேர் வடம் பிடித்து தொடங்கப்பட்டது.

முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் – கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. அதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் செல்கின்றன. தேருக்கு முன்னே சிவ வாத்தியங்கள் முழக்கமிடுகின்றன.பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும்
மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், இரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் அருளாசி வழங்க நின்று சென்றன. தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் பந்தல்கள் அமைத்து தண்ணீர் மற்றும் நீர் மோர் வழங்கி வருகின்றனர்.

இவ்விழாவையொட்டி, ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *