பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் உள்ள நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். டோக்கன் முறை இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விற்பனை செய்த நெலுக்கான தொகை தாமதமாகவே வங்கிக் கணக்கில் வருவதாகவும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து குற்றம்சாட்டியுள்ளார்.
“அன்றைய நாளிலேயே அல்லது அடுத்த நாள் பணம் வங்கியில் வரவேண்டும்,” என விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கான அலுவலக மற்றும் பணியாளர்களை போதிய அளவில் நியமிக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நில அளவை செய்வதில் உள்ள தாமதமும் விவசாயிகளுக்கு தலைவலியாக உள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்திய பின்பும், சர்வேயர்கள் காலதாமதமாக வருவதாக தெரிவிக்கின்றனர். “சீனியாற்றி முறையில், எந்தவிதமான ஊழலும் இல்லாமல், கிராம உதவியாளருடன் சேர்ந்து நிலம் அளக்கப்பட வேண்டும்,” என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சாலைகள் குறித்த பிரச்சனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. சில கிராமங்களில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக ஒரு பஸ் மற்றும் லாரி கூட ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை அகற்றப்பட்டு சாலைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதார் பிரச்சனையும் விவசாயிகளை வெகுவாக பாதித்துள்ளது. ரேகை சரிவரவில்லை என்றால், அரியலூரிலோ, அருகிலுள்ள நகரங்களிலோ திருத்த முடியாமல், சென்னையிலுள்ள அலுவலகத்திற்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 3 மாதத்திற்கு ஒருமுறை சென்னையிலிருந்து அலுவலர்கள் மாவட்டத்திற்கு வந்து சேவை செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
05.04.2025 அன்று அரியலூர் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் அளித்த மனுக்கள் தொடர்பாக தற்போது வரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்றும், அவற்றிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நெல் கொள்முதல் மையங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தி, நெல் எடை சரியாக போடப்படுகிறதா, ஊழல் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும், உரிய அலுவலர்கள் நேரில் வந்து விவசாயிகளிடம் நேரடியாக புகார்கள் பெற வேண்டும் என கூறப்படுகிறது.
இவற்றுடன், அரியலூர் புதிய பஸ் ஸ்டாண்டில் முதல்வர் மருந்தகம் மற்றும் உர விற்பனை நிலையம் வழங்கப்பட வேண்டும் எனவும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த உர கடை தொடர்ந்து புதிய இடத்தில் செயல்பட வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முற்றிலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து வலியுறுத்தியுள்ளார்.