சீர்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாக பிரித்த நான்கு வழி சாலை. போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர் தேங்கியதால் அதிவேகப் போக்குவரத்து நிறைந்த சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் கிராம மக்கள்.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை நான்கு வழி சாலை பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதில் சீர்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாகப் பிரித்து நடுவே 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நத்தம் கிராமத்தைச் சார்ந்த இருபகுதி மக்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வருவதற்காக பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சாலையின் நடுவே சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
ஆனால் உரிய திட்டமிடல் இன்றி சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டதால் கடந்த ஆறு மாதங்களாக மழை நீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லக்கூட சுரங்க வழி பாதையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் ஆபத்தான முறையில் அதிவேக போக்குவரத்து நிறைந்த நான்கு வழிச்சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் முதியோர்கள் என பலர் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக சுரங்கப்பாதையை சீரமைத்து தரவும் நான்கு வழி சாலையில் நடுவே இருபுறமும் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் மைய பிரிப்பான் சாலை அமைத்து தரவும் நத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.