வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் தேதியில் இருந்து ஐந்தாம் தேதி வரை சூரிய பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த 14-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ் வருடப்பிறப்பு அன்று காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அம்மன் மீது சூரிய ஒளி படும் நிலையில் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். இதேபோல் தினசரி சூரிய பூஜை விழா வருகிற 18- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த சூரிய பூஜை விழாவை வரதராஜன் பேட்டை தெரு தெய்வத்திரு சீனி. வேம்பையன் குடும்பத்தினர், சீனி. கோவிந்தராஜ், வே.குமாரவாசன், கோ.சண்முகசுந்தரம் யாதவ், கோ. பெருமாள் ஆகியோர் தொடர்ந்து பல ஆண்டுகளாக மண்டகப்படியாக செய்து வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூரத்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.