அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே குட்டிமேய்க்கிபட்டி,
கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி வைத்தார்.
அருகில் எம்.எல்.ஏ வெங்கடேசன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மேலூர் தொகுதிக்குட்பட்ட சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.
போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதோடு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் 10 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 75 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், 4,108 ஆம்புலன்ஸ் . 23 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் அலங்காநல்லூர் தீயணைப்பு துறையினரும், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்ககாசு,மெத்தை, சைக்கிள்,மிக்ஸி, கட்டில் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளது.மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .