கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த பூங்காவை அமைத்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
நம்ம சிறப்பு பூங்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு திறன் கொண்டவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முழு பூங்காவைய சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பார்வையிடலாம், எங்கும் மேடு பள்ளங்கள், படிக்கட்டுகள் இல்லாத வண்ணம் வடிமைக்கத்துள்ளனர். இங்கு விளையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள சாதனங்களும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக விளையாடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறப்பு குழந்தைகள் அவர்களின் திறன்களை வளர்த்து கொள்ளும் விதமாக பல்வேறு செயல்பாடுகளும் கற்றுத்தரப்படுகிறது. அதனையும் மாற்றுத்திறனாளிகளே வழங்குகிறார்கள்.
வாரம் திங்கட்கிழமை மட்டும் இந்த பூங்கா செயல்படாது என்றும் இதர நாட்களில் வேலைகளுக்கு செல்வோர் அவர்களது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு திறன் குழந்தைகளை இங்கு விட்டு செல்லலாம், அவர்களை பார்த்துகொள்வதற்காக பராமரிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.