தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி
வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தென்னையை காக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. சமீபகாலமாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் விவசாயிகளை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்ககம்,
மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டியில் உள்ள விவசாயி பாஞ்சலிங்கம் என்பவரது தோட்டத்தில் நடைபெற்ற இம்முகாமில், தோட்டக்கலை துறை இணை இயக்குநர்கள் அழகுமலை, சித்தார்த்தன்,தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் செளமியா உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.
முகாம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சிகள் துறை இணை பேராசிரியர் சுகந்தி கூறுகையில்,வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். முதல் நடவடிக்கையாக மஞ்சள் ஓட்டுப்பொறி கட்டுவதாகும். இதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த நன்மை பயக்கும் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்தலாம். இந்த ஒட்டுண்ணிகள் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன.
குறிப்பாக வேளாண் பல்கலை பரிந்துரைக்காத எந்த ஒரு மருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம். தென்னை மரங்களில் எந்த மருந்துகளையும் வேர் மூலம் கட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.