திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை உரையாற்றினார்.
கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன் வரவேற்பு உரையாற்றினார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் சுசீலா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், சிறந்த வேலைவாய்ப்பினை பெற தொடர் பயிற்சியின் அவசியத்தையும் எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றி, ஒவ்வொரு துறையிலும் வாரியத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்ற மாணவ, மாணவிகளுக்கும், நாட்டு நல பணித் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞான ராஜ் நன்றி உரையாற்றினார். இவ்விழாவினை இயந்திரவியல் துறை விரிவுரையாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.