தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ன் கீழ் விதி 42B-ன்படியும், தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950-ன் கீழ் விதி 113-ன்படி, அனைத்துத் தொழிற்சாலைகளிலும், மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் எனவும் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். பின்னர் ஆங்கிலத்திலும்,அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழியிலும் அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களைத் தலைவராகவும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) உறுப்பினர் செயலராகவும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் மாவட்ட அளவிலான வேலையளிப்பவர் சங்கம் உறுப்பினராகவும் கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லுரிகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 2025 மே 15-க்குள் 100 சதவீதம் தமிழ் பெயர்ப்பலகை வைக்கப்படுவதை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், 2025 மே 15-க்குள் தமிழில் யெர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள் உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் சங்கங்கள் தங்களின் குழு உறுப்பினர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ்ப் பெயர்ப்பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்.சரவணன் தெரிவித்துள்ளார்.