திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பாடைக் காவடி திருவிழா கடந்த 7- ஆம் தேதி பூச் சொரிதல் விழா உடன் தொடங்கியது. கடந்த 9- ஆம் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் 16- ஆம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது, அன்று முதல் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான பாடைக் காவடி திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இத் திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே பக்தர்கள் கலந்துகொண்டு பால் காவடி, பாடைக்காவடி, அலகு காவடி, தொட்டில்காவடி, பறவை காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆலயம் அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து பச்சை மூங்கிலால் பாடை கட்டி முன்னதாக வேண்டிக் கொண்டவர் பாடையில் படுத்து கொள்ள, ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர் தீச்சட்டி எடுத்துக்கொண்டு முன்னே செல்ல தாரை, தப்பட்டைகள் முழங்க உறவினர்கள் பாடைக்காவடி எடுத்தனர்.
பாடைக்காவடி ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து ஆலயத்தில் எதிரியே பூசாரி விபூதி தெளித்து உடன் எழுந்து சகஜ நிலைக்கு திரும்புவார். பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது மாநிலத்தில் எங்கும் நடைபெறாத ஒரு நிகழ்வாகும். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை அம்மன் வீதி உலா காட்சி வந்து, ஆலயத்திற்கு எதிரே செடில் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. செடில் சுற்றும் நிகழ்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது,
இரவு 10 மணிக்கு புராண நாடகம் நடைபெற்றது. வருகின்ற 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்ப பல்லக்கு விழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி போக்குவரத்து துறை சார்பில் மன்னார்குடி, பாபநாசம், குடவாசல், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வலங்கைமானுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
300க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். வலங்கைமான் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள், சாலையில் தண்ணீர் தெளித்தால், குடிநீர் வசதி தெரு விளக்கு வசதிகள் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.
திருவிழாவில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சௌமியா, இந்து சமய அறநிலையத் துறை திருவாரூர் உதவியாக சொரிமுத்து, வலங்கைமான் ஒன்றிய திமுக செயலாளர்கள் மேற்கு ஒன்றிய வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, பேரூர் செயலாளர் பா. சிவனேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், க. செல்வம், பானுமதி வி.சி. ஆர். உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட அரசுத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படி தாரார்கள், வரதராஜன்பேட்டை தெருவாசிகள் நல சங்கத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.