மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

தென்காசி,

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க வரும் 25.03.2025 சென்னையில் பேரணி நடைபெற உள்ளதாக மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நல்.செல்லப்பாண்டியன், பொதுச்செயலாளர் வே.புதியவன், பொருளாளர் கோ.ரெங்கராஜ், ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கடந்த
02.7.1990 அன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். திமுக ஆட்சியில டாக்டர் கலைஞரால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்தால் அ.தி.மு.க அரசு கடந்த 35 ஆண்டுகளில் 3 முறை பணி நீக்கம் செய்து பழிவாங்கியது.

அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்கள் நலப் பணியாளர்கள் பணியை நிரந்தரம் செய்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இனியும் இந்நிலை ஏற்படாத வகையில் கீழ்க்கண்ட எங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டுகிறோம்.

01.07.2022 முதல் வாய்மொழி உத்தரவாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு 2006-2011 கலைஞர் அரசின் 6 -வது ஊதியக்குழு பரிந்துரையின்படி O1.06.2009 முதல் வழங்கப்பட்ட கால முறை ஊதியத்துடன் பணிவரையறையுடன் பணி நிரந்தரத்திற்கான அரசாணையை வழங்கிட வேண்டும்.

கடந்த 09.11.2011 முதல் இறந்து போன மற்றும் ஓய்வு பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரூபாய்
5 லட்சம் நிவாரண தொகையும் வாரிசுகளுக்கு வேலையும் வழங்கிட வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமே முழுமையான ஊதியம் மற்றும் பணியிடம் மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி 26.03.2025 ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு அரசாணை வெளியிட வேண்டும்.

2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும், திமுக பிரச்சாரக் கூட்டங்களிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியின்படி 19.08.2014 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியும் மேற்கண்ட கோரிக்கைகளுக்கான அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதன்படி வரும் 25.03.2025 காலை 11.00 மணிக்கு சென்னை இராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டு ‌தலைமைச் செயலகம் வரை செல்லும் மாபெரும் பேரணி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் நல். செல்லப்பாண்டியன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் புதியவன் மாநில பொருளாளர் கோ.ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது
35 வருடங்களாக இழந்த நமது உரிமைகளை மீட்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் இந்த பேரணியில் அவசியம் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *