பளிச்சியம்மன்
முனைவர் சா. சே. ராஜா, கச்சைகட்டி, மதுரை
சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன், துடிப்பான தெய்வம்
எங்க காவல் தெய்வதுல ஒண்ணு, மனுஷ மக்க எல்லாரும் பயத்தோடும் நம்பிக்கையோடும் வணங்குற தெய்வம், எங்களுக்கு ஏதாச்சு ஒண்ணுன்னா ஓடிப்போயி வேண்டுனா எங்கள காப்பாத்துறது எங்க ஆத்தா அவதான். பேயி பிசாசுங்களை பயமுறுத்தமா காக்கும் தாயி,
இந்தா அந்த வீட்டுல இருக்குற சுருளியோட மூணு வயசு குழந்தைக்கு திடீருனு காய்ச்சல், யாருமே எதிர்பாக்கல, கையில தூக்க முடியல பச்ச பிள்ளைக்கு உடம்புல அம்புட்டு சூடு, கசாயம், வேறுசாறுனு கொடுத்தாலும் ஒன்னும் குறையல, சுருளியும் அவன் பொண்டாட்டியும் ஒரே அழுகை, ஒத்தப் பிள்ளை இப்படி ஆச்சேன்னு மனசே கலங்குது சொல்லும் போது அப்படி இருந்துச்சு,
என்ன என்னமோ பண்ணியும் ஒன்னும் ஆகல, ரெண்டு நாள் கழிச்சு, ஆத்தா இந்தா உன் பிள்ளைய நீயே எடுத்துக்கோ, நீதானே கொடுத்த இந்தா நீயே வச்சுக்கோ, ஒன்னு எங்களுக்கு எம் புள்ளைய திருப்பி கொடு இல்லைனா நீயே எடுத்துக்கோ, அவ போனதுக்கு பிறகு நாங்களும் இருந்து என்ன பண்ணப்போறோம் கத்தி கதறி அழுதான் சுருளி.
அவன் பொண்டாட்டியும் ரெண்டு நாளா சாப்பிடமா அழுது அழுது பாவம் புள்ள இன்னும் ரெண்டு நாள் விட்டுருந்தா அம்புட்டுதான் உசுருனு போயிருக்கோம்.
அப்படி இருந்த குடும்பத்தை எங்க தாயீ பளிச்சியம்மன் கைவிடல, ஆத்தா இருக்குற வேப்பமரத்து இலையை கசாயமா வச்சு கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா காப்பாத்தி இன்னிக்கு அந்த குடும்பமே நல்லா இருக்கு. ஆத்தாவோட கைப்பிடி மண்ணு போதும் எங்கள காப்பாத்த,எல்லாம் எங்க பளிச்சியம்மன் ஆத்தாவோட துணைதான்.
அதுமாதிரி யாருமே இங்க இருக்கிற மரங்களை வெட்டமாட்டம் அப்படி வெட்டினால் எங்களை எங்க தாயீ பளிச்சியம்மன் எதாவது ஒரு உருவுல தண்டிச்சுடுவா, இன்னிக்கும் நாங்க இந்த காட்டுக்குல வாழுறோம், எங்களை எந்த பேயும் பிசாசும் ஒன்னும் பண்ணுறது இல்ல, காரணம் எங்க பளிச்சியம்மன். பச்சிளியம்மன் எங்களை வேங்கை மர உதவியோடு காப்பாத்துறா,.
ஆமா உண்மைதான் ஒருவாட்டி ஒரு இளவட்ட பையன் வீட்டுக்கு தேவைன்னு மரத்தை வெட்டி எடுத்தான். அடுத்த நாள் அவன் உசுரோடு இல்ல. வீட்டுல தூங்கின புள்ள பாம்பு கடிச்சு இறந்துட்டான். பாம்பா வந்து கொண்டது பளிச்சியம்மன்தான். இப்படி நிறையா இருக்குபா.
வேங்கைமரத்தின் மீது கத்திய வச்சு கீறி சின்னதான கோட்டினைப் போட்டு அதிலிருந்து சிவப்புநிறத்துல வரும் கொஞ்சம் நேரம் கழிச்சு அதுவே கருப்பா மாறும் அதான் தெய்வ சக்தி, இந்த இயற்கை தாய் என்ற தெய்வ சக்தி அதை எடுத்து எங்க புள்ள குட்டிங்களுக்கு நெத்தியில வச்சுவிடுவோம் ஆத்தா புண்ணியத்துல எந்த காத்து கருப்பும் அண்டாது.
அதுபாட்டுக்கு ஓடி ஆடி விளையாடி திரியுங்க, வெளியில இருந்து வர மனுஷங்கதான் இங்க அது இருக்கு இது இருக்குனு சொல்லுவாங்க எங்களுக்கு எல்லாம் எங்க ஆத்தா தொணைதான். என்று பக்தி பரவசம் பொங்கி ஒருவித சிலிர்ப்புடன் சொன்னார் சுடலை.