மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மார்ச் 2ஆம் தேதி மாரியம்மனுக்கு சாட்டுதல் விழாவும், 9ஆம் தேதி பத்திரகாளி அம்மனுக்கு சாட்டுதழ் விழாவும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருக்கோவில் கொடிமரத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், அக்னி சட்டி, மாவிளக்கு, வேல் குத்தி, முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று இரவு வானவேடிக்கை முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.