மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தன்னம்பிக்கையுடன் ஓடிவந்து எட்டாம் இடத்தை பிடித்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி அனைவரின் பாராட்டைப் பெற்றார்:-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181-ஐ பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது.
பள்ளி கல்லூரி மாணவிகள் காவல்துறையினர், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை கால் டாக்ஸ் பகுதியில் துவங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் அனைவரும் உற்சாகமாக ஓடினர். மணக்குடியில் போட்டி நிறைவடைந்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. குட் சாமரிட்டன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் 11 இடங்களை பிடித்தனர். இதில் குறிப்பாக இப்பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி ராஷ்மிகா தன்னம்பிக்கையுடன் ஓடிவந்து எட்டாம் இடத்தை பிடித்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். அனுரெக்ஸி, அனுஷ்கா, ஆசிகா ஆகிய மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.