தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய விவசாய அணி தலைவர் பாண்டி, ஊராட்சி பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் உரையாற்றிய போது “மத்திய அரசின் சார்பில் பொது மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த அத்தியாவசிய பொருட்களிலும் ஊழல் கொள்ளை போன்றவை திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டியுள்ளது

மாநில அரசு. அந்த கணக்கில் நிறைய குளறுபடிகள் இருப்பதால், மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது. பொதுமக்களுக்கு திட்டங்கள் சரியாக சென்று அடைய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். கல்வி கற்பதில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தான் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

இந்தியை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. மத்திய அரசு பொது மக்களுக்கு எண்ணற்ற வகையில் பயன் பெறும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது ” என்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயற்குழு முருகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் மகாலிங்கம், ராமகுரு, விவசாய அணி நிர்வாகிகள் ராஜா, கிளை பொறுப்பாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முனியாண்டி சிறப்பாக செய்திருந்தார்.

Share this to your Friends