முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்:
தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்க்கைக்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் தங்களை இந்த பட்ஜெட்டில் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.
இதற்காக கவர்னர், முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலாளர், நிதி அமைச்சர், நிதி செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மற்றும் திமுக தேர்தல் அறிக்கை குழு என 10 பேருக்கு கோரிக்கை மனுவை தமிழகம் முழுவதும் அனுப்பி வருகின்றார்கள்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :
திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் முதல்வர் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில் 22-06-2023 மற்றும் 18-09-2021 என இரண்டு முறை கலந்துரையாடல் கூட்டம் நடத்தி அதில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டு அதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களை நியமித்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இரண்டு தேர்தல் அறிக்கையிலும், அந்த 10 ஆண்டு காலத்தில் சட்டசபையிலும் வலியுறுத்திய கோரிக்கையை, இப்போது அனைத்து கட்சிகளும் முதல்வரிடம் 07-05-2021 முதல் வலியுறுத்தி வருகிறது.
முதல்வர் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 22-03-2022 அறிவித்து உள்ளார்.
அனைத்து அரசு துறை செயலாளர்கள் ஆய்வுக் கூட்டத்திலும் 16-09-2021 அன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதல்வர் சட்டபேரவையிலும், அரசுத்துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டத்திலும் சொன்னதை செயல்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் பணி நிரந்தரம் பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளதாக 12-11-2024 அன்று தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் முதல்வர் தனது தலைமையிலான அமைச்சரவையும், பள்ளிக்கல்வித்துறையும் ஒருங்கிணைந்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இந்த வேலையில் மாற்றுத்திறனாளிகள், விதவை, மகளிர், ஏழை விளிம்பு நிலை குடும்பங்கள் என சமுதாயத்தில் கஷ்டப்படுகின்றவர்கள் தான் உள்ளார்கள். பலர் 50 வயதை கடந்து விட்டார்கள்.
தற்போது உடற்கல்வி 3700 பேர், ஓவியம் 3700 பேர், கணினி அறிவியல் 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300 பேர், தோட்டக்கலை 20 பேர், கட்டிடக்கலை 60 பேர், வாழ்க்கைக்கல்வி 200 பேர் என மொத்தம் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
இன்றைய விலைவாசி உயர்வில் தற்போதைய சம்பளம் 12,500 ரூபாயை வைத்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.
மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு என எதுவுமே இதுவரை கிடையாது என்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள்.
12 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்க காலமுறை சம்பளத்தில் நிரந்தரமான வேலையை அரசு வழங்க வேண்டும். இதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும் முந்தைய காலங்களில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள், பகுதிநேர பணியாளர்கள் என பல்வேறு துறைகளில் காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டதைப் போல், பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கூறியது :
திமுக தேர்தல் வாக்குறுதி 153ல் அரசுத் துறைகளில் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்வோம் என முதல்வர் சொல்லி இருந்தார். 14 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றோம் என்பதால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் அப்போது பேசிய முதல்வர் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிரந்தரம் செய்வதாக சொன்னார். இது திமுகவின் 377 வது வாக்குறுதியாக உள்ளது. இந்த வாக்குறுதிக்காக நான்கு ஆண்டாக காத்துள்ளோம்.
முக்கிய வாக்குறுதியாக 181ல் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலில் வாக்குறுதி கொடுத்த முதல்வர் அதனை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும். 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் கருதி இதை செய்ய வேண்டும் என்றார்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257293