விருத்தாசலம்,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மண்டல செயலாளர் வக்கீல் அருண், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாநில பேரவை துணை செயலாளர் அருள் அழகன் வரவேற்றார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம் எல் ஏ, தலைமைக் கழக பேச்சாளர் காரியாபட்டி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
வரி விதிக்கும் மாநில உரிமையை மத்திய அரசுக்கு விட்டு தர மாட்டோம் என முழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி ஆட்சியில் அந்த உரிமையை விட்டுக் கொடுத்து விட்டார்கள்.
ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதற்காகத்தான் வரி விதிக்கும் உரிமையை கையில் எடுத்தார்கள். அனைத்து மாநில உரிமைகளையும் விட்டுக் கொடுத்தது தான் திமுக அரசின் சாதனை. திமுக ஆட்சியில் இன்று எங்கு பார்த்தாலும் கஞ்சா தலைவிரித்தாடுகிறது.
அதனால் விரைவில் தேர்தல் வருகிறது. இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும். அம்மா திட்டம் தொடர, தாலிக்கு தங்கம், மிக்ஸி கிரைண்டர், 6 சிலிண்டர்கள் கிடைக்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை. வரவுள்ள தேர்தல் உங்களுக்கான தேர்தல். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்காகவே பாடுபடும் கட்சி. பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, தம்பிதுரை, வேல்முருகன், மங்கலம்பேட்டை பேரூராட்சி செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகசிகாமணி, மாவட்ட பேரவை துணை செயலாளர் மணிமாறன், நகர துணை செயலாளர் அரங்க.மணிவண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனஸ்ட் ராஜ் நன்றி கூறினார்.