தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: கனிமொழி கருணாநிதி எம்.பி.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை சார்பில் ’பெண்களின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு இன்று (25/02/2025) நடைபெற்றது. இந்த தேசிய மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், அர்ஜுனா விருது பெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கனிமொழி எம்.பி சிறப்பித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி, கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கிறது, ஒன்றிய பட்டியலில் இல்லை. தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல், தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களை மதிக்காமல் மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்து திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல் இந்தியை திணிக்கவில்லை, குழந்தைகள் மும்மொழிக் கொள்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவதையும் ஏற்கமுடியாது. உலக மக்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகப் பயில வேண்டிய ஒரு மொழிதான் ஆங்கிலம். ஆனால் தாய் மொழி என்பது நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்தக்கூடியது, நம்மை புரிந்து கொள்ள கூடிய மொழி தமிழ்.
இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதனை குழந்தைகள் முடிவு செய்ய வேண்டும். அவர்களுடைய ஆர்வம், எதிர்காலத் திட்டங்களை மையமாக வைத்து இன்னொரு மொழி, அது என்ன மொழி என்பதைக் அக்குழந்தை தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு மாநிலம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரண்டு மொழி கொள்கை என்று முடிவு செய்த பிறகும் இன்னொரு மொழியை திணிப்பேன் என்று கூறுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
அம்மா மருந்தகம் பற்றிய கேள்விக்கு; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி, அம்மா மருந்தகத்தை தொடர்ந்து முறையாக செயல்பட செய்திருந்தால் மறுபடியும் கொண்டு வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது எனக் கூறினார்.
இந்நிகழ்வில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் முதல்வர் Dr.ஸ்டெல்லா மேரி, சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் PRO வேந்தர் Dr.காலா விஜயகுமார், கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.