திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம். கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு

திருவாரூர், பிப்.22- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரடாச்சேரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் வீரசேகரன், மாவட்ட மகளிர் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் வரவேற்றும் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் வட்டாரச் செயலாளர் சந்திரமோகன் உரையாற்றினார். பிப்ரவரி 25ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா, வட்டார துணைச் செயலாளர் அகஸ்டின் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் வட்டாரப் பொருளாளர் யசோதா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, கொரடாச்சேரி வட்டாரத்தின் சார்பில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழாவினை மார்ச் 30ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் நூறு சதவீத ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி, திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

வட்டார ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்களை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் 2023-25 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை முடித்து வழங்கப்பட்டது.

Share this to your Friends