காஞ்சிபுரம் ராமபிரானைப் போன்று நாமும் வீரத்திலும்,விவேகத்திலும் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா எனப்படும் சங்கரா பல்கலையின் 28 வது பட்டமளிப்பு விழா பல்கலையின் மத்திய நூலக வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் துணை வேந்தர் ஜி.சீனிவாசு தலைமை வகித்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்த 461 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

பல்கலையின் இணை துணைவேந்தர் ஆர்.வசந்த்குமார் மேத்தா முன்னிலையுரை நிகழ்த்தினார்.அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் தலைவர் டி.ஜி.சீத்தாராமன் கலந்து கொண்டு 46 பேருக்கு தங்கப்பதக்கமும்,23 பேருக்கு வெள்ளிப்பதக்கமும்,90 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கி பேசினார்.

இதனைத் தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ,மாணவியர் வரிசையாக சென்று காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி பேசியது..

வீரம்,விவேகம்,அன்பு,பொறுமை,மனித நேயம்,வீரத்தை அவசரப்படாமல் தேவைப்படும் போது பயன்படுத்தும் யுக்தி இவை அத்தனையும் ஒரு சேர அமைந்தவர் ராமபிரான்.அவரைப்போல நாமும் அனைத்து திறமைகளையும் உடையவர்களாக திகழ வேண்டும்.பொருளாதாரத்தில் மட்டும் வளர்ந்த ஒருவரை வளர்ச்சியடைந்தவர் என்று கூற முடியாது.உடல் ஆரோக்கியம்,மற்றவர்களிடம் அணுகும் விதம்,விட்டுக் கொடுத்து அனுசரித்து போகும் குணம் இவை அனைத்தும் உள்ள ஒரு மனிதரையே நாம் வளர்ச்சி அடைந்தவராக கருத வேண்டும்.

சங்கரா பல்கலைக்கழகம் நடமாடும் தெய்வமாகவே விளங்கிய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 100 வது ஆண்டு நினைவாக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கப்பட்டது.இதை பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வந்து தொடங்கி வைத்தார்.இக்கல்வி நிறுவனம் இன்று பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.

தேச பக்தியையும்,தெய்வபக்தியையும்,கல்வியறிவையும் வழங்கும் பெருமைக்குரிய இடமாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது என்றும் பேசினார்.

விழாவில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையின் துணை வேந்தர் எஸ்.வைத்ய சுப்பிரமணியம்,சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி,பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமச்சந்திரன்,காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன்,ஸ்டேட் வங்கி காஞ்சிபுரம் கிளையின் முதன்மை மேலாளர் கி.மணிகண்டன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Share this to your Friends