திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது 18 .63 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இந்த பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப் -09) திறந்து வைத்து பறவைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.

திருச்சி – கரூர் செல்லும் சாலையில் கம்பரசம்பேட்டை காவேரி நதிக்கரையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ18.63 கோடி மதிப்பீட்டில் 60,000 சதுர அடி பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பறவைக் கூடமாகும்.இங்கு 40 முதல் 60 இனங்களைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.இந்த பறவைகள் பூங்காவில் செயற்கை அருவிகள், குளங்கள் மற்றும் பல புதிய அமைப்புகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், இங்கு ஒரு மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தியேட்டரில் சுமார் 50 பேர் வரை ஒன்றாக அமர்ந்து பறவைகள் தொடர்பான திரைப்படங்களை காணலாம். மேலும் அறிவியல் சார்ந்த குறும்படங்களும் இங்கு திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.இந்த பூங்காவிற்கு வருவோருக்கான அடிப்படை வசதிகளான உணவகம், வாகன நிறுத்தும் வசதிகள் , கழிப்பறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 60 கார்கள் மற்றும் 100 இருசக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களுக்கு இந்த பறவைகள் பூங்கா ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்,மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர ஆணையர் சரவணன், மாநகர மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.காவல் துறையினர் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Share this to your Friends