கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வருகின்ற பிப்ரவரி 11, 12 மற்றும் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று முடிந்தது.

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இருப்பினும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பல காளைகள் நேரமின்மை காரணமாக வாடிவாசலில் அவிழ்த்து விட முடியாமல் போனது. இதனால் காளை உரிமையாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து இந்த காளைகளுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி அப்பொழுதே அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பிலும் 16ஆம் தேதி சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பிலும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன் பாலராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவைத் தலைவர் இடையபட்டி நடராஜன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சித் தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், வாடிப்பட்டி பால்பாண்டி, மற்றும் நிர்வாகிகள் தனுஷ்கோடி, அருண்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், பொதுப்பணி துறையினரும் கலந்து கொண்டனர்.

Share this to your Friends