திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலைய கடைகள், பழைய நகராட்சி அலுவலக பழைய கடைகள், பழைய நகராட்சி அலுவலக புதிய கடைகள் மற்றும் சுவாமிநாதன் தினசரி மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 27 கடை உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக வாடகை தராமல் ரூ 55 லட்சம் பாக்கி நிலவை வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு பலமுறை வாடகை நிலுவை தொகையினை செலுத்த கோரி கேட்பு அறிவிப்புகள், நேரில் பல முறை, தொலைபேசி மூலமும் ஒலி பெருக்கி வாயிலாகவும் பல முறை அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் சிலர் கடை வாடகையினை செலுத்தாமல் அதிக நிலுவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா வாடகை நிலுவை வைத்துள்ள 27 கடைகளை பூட்டி சீல் வைக்குமாறு நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.அதன்படி நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் கலைபிரியன், பாண்டித்துரை, நகரமைப்பு ஆய்வாளர் சந்திரா, இருக்கை எழுத்தர் ஜெயக்குமார், வருவாய் உதவியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர் காவல் துறையினர் பாதுகாப்போடு ரூ 55 இலட்சம் வாடகை நிலுவைத்தொகை வைத்திருந்த 27 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

இது பற்றி நகராட்சி ஆணையாளர் போ.வி. சுரேந்திர ஷா கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகையினை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அவர்கள் மீது சட்டபூர்வ மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share this to your Friends