தூத்துக்குடி மாவட்டம் உடையன்குடியை சேர்ந்தவர் சந்திர குமார்(60). இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும், செல்வகுமார், பாண்டியன் என 2 மகன்களும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.
இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் விவசாயம் சார்ந்த பூச்சி கட்டுப்பாடு மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 13 ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள தன் நண்பரை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 15 ஆம் தேதி அதிகாலை சந்திரகுமார் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். உடனடியாக சந்திரகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவர் தொடர்ந்து இந்ந உலகில் வாழலாம் என மருத்துவர்கள் அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.
சந்திரகுமார் குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் போன்ற உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தமிழக அரசு விதிகளின்படி உடல் உறுப்பு தேவைப்படுவோருக்கு தானமாக வழங்கப்பட்டன.