உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் செய்யும் உன்னத சேவைகளையும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக 2025க்கான சர்வதேச செவிலியர்கள் தினம் வரும் மே 12ம் தேதி கொண்டாடப்படும், மேலும் மே 6 முதல் 12ம் தேதி வரை சர்வதேச செவிலியர்கள் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு தமிழகத்தின் தலைசிறந்த பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சர்வதேச செவிலியர்கள் வாரத்தை முன்னிட்டு செவிலியர்களின் உன்னத சேவைகளை எடுத்துரைக்கும் படி ‘வாகத்தான்” எனும் நெடுந்தூர நடைபயண நிகழ்வு நடைபெற்றது.
“நமது செவிலியர்கள், நமது எதிர்காலம்” எனும் தலைப்புடன், கோவை ரேஸ் கோர்ஸ் – தாமஸ் பார்க் பகுதியில் நடைபெற்ற இந்த வாகத்தான் நிகழ்வை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தும் அமைப்பான எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் எஸ்.என் ஆர் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார்; மருத்துவமனையின் தலைமை செவிலியர் துறை அதிகாரி கிரிஜா, தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார, மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் மற்றும் மருத்துவமனையின் செவிலியர்கள் மருத்து பணியாளர்களுடன் பொது மக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடனம் மூலம் முதலுதவி, உடல் ஆரோக்யம் என பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.