தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
குண்டடம் அருகே பேட்டரி இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் நான்கு வாலிபர்கள் அதிரடி கைது. கோவை மத்திய சிறையில் அடைப்பு. நான்கு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள முண்டு வேலம்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் விஜய் (வயது -35) தனியார் காற்றாலை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4-ம் தேதி தனது வீட்டின் முன்பு அவரது இரு சக்கர பேட்டரி வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது தனது பேட்டரி வாகனம் வீட்டின் முன்பு இல்லாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து விஜய் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்கள் மூலமாக கண்காணித்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்த நிலையில் தாராபுரம் அருகே காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்களை குண்டடம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் மடத்துக்குளம் மெட்ராத்தி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் மணிவாசகம் (30),நடராஜ் என்பவர் மகன் நாகேஷ் (35),நாகராஜ் என்பவரது மகன் திருமூர்த்தி (27) மற்றும் கணியூர் வஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் பூபதி (32) என்பதும், அவர்கள் 4 பேரும் விஜயின் இரு சக்கர பேட்டரி வாகனத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும் பேட்டரி வாகனத்தின் சில உதிரி பாகங்களை விற்று விட்டதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
திருடப்பட்ட பேட்டரி வாகனத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு சக்கர பேட்டரி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களை அழைத்து சென்று தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி, அவரது உத்தரவின் பேரில் மணிவாசகம்,நாகேஷ் ,திருமூர்த்தி, பூபதி ஆகிய 4 பேரையும் கொண்டு சென்று கோவையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
திருட்டு சம்பவம் நடைபெற்று 4 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த குண்டடம் காவல்துறையினரை அப்பகுதி மக்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.