தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டிஎஸ்பி உடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி பேசுகையில், மாணவர்களுக்கு மிக மிக முக்கியமானது படிப்பு மட்டும் தான்.
பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும்.
நம்முடைய உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும், எந்த உதவி எண்ணை அழைக்க வேண்டும் என்று மாணவர்களாகிய நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பள்ளிக்கு செல்லாமல் படிக்காமல் இருப்பவர்களிடம் சைபர் கிரைம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். நல்ல சம்பளத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்று யாராவது சொன்னால் நாம் நம்பக்கூடாது.
நம்முடைய சொந்த முயற்சியால் படித்து மட்டுமே அரசாங்க வேலை வாங்க வேண்டும்.
நாம் பள்ளிப் பருவத்திலேயே நாம் என்னவாக பிற்காலத்தில் வரவேண்டும் என்று நம்முடைய இலக்கை முடிவு செய்ய வேண்டும்.
நம்முடைய இலக்கை அடைவதற்கான முயற்சியை தினம்தோறும் கடைபிடிக்கவேண்டும். பத்தடி முன்னால் போக வேண்டுமே தவிர ஒரு அடிகூட பின்னால் போகக்கூடாது.
எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான திறமை உள்ளது. நாம் அதைப் பயன்படுத்தி படிக்க வேண்டும்.
எல்லோரும் 100 மதிப்பெண்கள் எடுக்கலாம். நமக்கு ஒரு பாடம் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
நாம் அந்தப் பாடத்தை மட்டும் அதிக நேரம் கொடுத்து படிக்க வேண்டும். தமிழ் செய்தித்தாள், ஆங்கில செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் ஆங்கில செய்தித்தாள் படிக்கும் போது கடினமாக தெரியும். படித்து பழகிவிட்டால் சுலபமாக படிக்க முடியும்.
நம்முடைய கையெழுத்து நன்றாக இருக்கிறதா என்பதை முதலில் நாம் பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் ஏதேனும் சொல்வார்கள் என்று மாற்றிக் கொள்ளாமல் நமக்காக கையெழுத்தை நன்றாக இருக்குமாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் இப்போதிலிருந்தே படித்து பெரிய பதவிக்கு வந்து ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்
நாம் நம்மை வருத்தி கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனை திருக்குறளின் மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம் இவ்வாறு பேசினார்.
சிறப்பான கேள்விகள் கேட்டு பதில்களையும் கூறிய மாணவ-மாணவியர் நந்தனா, ரித்திகா, கனிஷ்கா, தீபா, பிரிஜித் , சுபிக்ஷன், யோகின் யோகேஸ்வரன் ஆகியோருக்கு டிஎஸ்பி கௌதம் பரிசுகளை வழங்கினார்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் டிஎஸ்பி பதில் கூறினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.