தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணை செய்து கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான டி எஸ் ஆர். வேங்கட ரமணாவும் இந்த வழக்கில் ஆஜரானார்
கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பணிகள் பூர்த்தியடைந்து யாகசாலை பூஜைகளும் துவக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிடப்பட்டது இதை அடுத்து கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை விளக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கடந்த இரு தினங்களாக பக்தர்களிடையே நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது .தீர்ப்பினை அறிந்த தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் தென்காசி காசி விசுவநாதர் திருக்கோயில் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.இந்த தீர்ப்பானது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக பக்தர்கள் சந்தோஷ கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.