கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. மொத்தம் 304 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒப்படைத்தார். இதன் மதிப்பு ரூபாய் 54 லட்சம் ஆகும். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொது மக்கள் மத்தியில் காணாமல் போன மற்றும் திருடு போன 304 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 54 லட்சம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் 756 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் செல்போன்களை தொலைத்தாலோ அல்லது திருடு போனாலும் சிஐஆர் . போர்டல் செயலிமூலம் ஆன்லைன் புகார் அளிக்கலாம். அந்த செல்போனை யாராவது எடுத்து உபயோகப்படுத்தும் போது இருப்பிடத்தை கண்டு அறிந்து செல்போன்கள் மீட்கப்படும்.
கோவை மாவட்டத்தில் தொடர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழிப்பறி, கூட்டுக் கொள்ளை உள்பட பழைய சரித்திர குற்றவாளிகள் 76 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நன்னடத்தை அடிப்படையில் 70 பேர் விடுவிக்கப்பட்டனர்
அவர்களிடம் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என எழுத்துப் பூர்வமாக பெறப்பட்டு உள்ளது. இதை மீறி அவர்கள் ஏதேனும் குற்றம் நடவடிக்கையில் மீண்டும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
.
அதே போன்று கோவை மாவட்டத்தில் உள்ள தாபா, ஓட்டல்களில் மற்றும் பல்வேறு இடங்களில் வெளி மாவட்டத்தில் இருந்து பலர் வந்து வேலை பார்க்கிறார்கள் அவ்வாறு பணி புரிபவர்கள் அந்த மாவட்டங்களில் ஏதாவது குற்ற சம்பவங்களில ஈடுபட்டவர்களாஎன விசாரணை செய்யப்படுகிறது.
அவர்களின் முக அமைப்பு கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டு பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இதற்காக 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் குற்ற நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கல்லூரிகளில் படிப்பு பாதையில் நிறுத்திய சிலர் இதுபோன்ற தவறில் ஈடுபடுவது தெரியவந்து உள்ளது. அவர்கள் குறித்து கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் பண்ணை வீடுகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சி.சி.டி.வி கேமரா பொருத்தவும் தோட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.