கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புதிததாக தனியார் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் பெண்கள்,பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும் இந்த மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
க.க.சாவடி சந்திப்பு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டு டாஸ்மாக் மற்றும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக ஜனநாயக முறைப்படி ஆயிரக்கணக்கானோர் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக தவெக மாவட்ட தலைவர் விக்னேஷ் தெரிவித்தார்.