சீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றி, தமிழ்நாட்டின் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.துரை வைகோ அறிக்கை.

தமிழ்நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்ற, தலைவர் வைகோ அவர்கள் தானே களத்தில் இறங்கியதோடு, மண்வளம் மற்றும் நீர்வளத்தைக் காக்க நீதிமன்றத்தையும் நாடினார்.

2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைவர் வைகோ அவர்களால் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டது.

ஆனால், சீமைக்கருவேல மரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் சில தனியார் தொழிலதிபர்கள் இந்த உத்தரவிற்கு தடை ஆணை கோரினார்கள். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சீமைக்கருவேல மரம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக உறுதியானது. எனவே, அதை அகற்றுவது ஒரே தீர்வு எனவும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக, தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த சீமைக்கருவேல மரம் அகற்றும் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் 48-சி அறையில், நேற்று (24.03.2025) நீதியரசர்கள் சதீஷ்குமார் மற்றும் டி. பாரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு 2025 ஏப்ரல் 25-க்குள் முடிவெடுத்து உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டுமெனவும், அவற்றை அகற்றுவதற்கு பொது ஏலம் விடுவது குறித்து முடிவு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

மேலும், ஏப்ரல் 25-க்குள் பதிலளிக்கத் தவறினால், உயர்நீதிமன்றமே முடிவெடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட நேரிடும் எனவும் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டுமென உறுதியாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இதற்கான நிரந்தர தீர்வு வகுத்து, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அதை விரைவாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டின் மண் மற்றும் நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

சீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றுவதன் மூலம், உங்கள் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மண்ணுக்கும் உகந்த அரசு என்பதை நிரூபித்து வரலாற்றில் இடம்பெற வேண்டுமாய் வேண்டுகிறேன். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *