துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநில கொலையாளியை துறையூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை என்பவரது மகன் கண்ணையன்.இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது புதிய வீட்டிற்கு தச்சு வேலைக்காக பாலசுப்பிரமணியன் என்பவரிடம் ஒப்பந்தம் விட்டிருந்தார்.
இந்த வேலையை மேற்கு வங்கம் செட்டதாரிபள்ளி ருதுசர்மா என்பவரின் மகன் தரம் சர்மா (31)என்பவரிடம் சப் காண்ட்ராக்டாக விட்டிருந்தார். இவரிடம் பீகார் மாநிலத்தில் உள்ள மகேஷ்குண்ட் மாவட்டம் இங்கிலீஷ் டோலா பகுதியை சேர்ந்த சச்சின் (எ) சச்சின் குமார்(26),சிண்டு என்கிற சோட்டு (28) ஆகிய இருவரும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் தரம் சர்மா சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை 21/09/2023 அன்று கேட்டு இருவரும் தரம் சர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகராறில் இருவரும் சேர்ந்து தரம் சர்மாவை இரும்பு சுத்தியலால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து இருவரும் அவர்களது சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்க்கு தப்பித்துச்சென்று தலைமறைவாகி விட்டனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற அப்போதைய துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர் .இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின் என்கிற சச்சின் குமார் 18 மாதங்களுக்குப் பிறகு பீகாரிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்து கொண்டிருப்பதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தல்படி 23/03/2025 அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சாதாரண உடையில் கண்கானித்து வந்தனர்.அப்போது ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து இறங்கிய சச்சின் குமாரை சுற்றி வளைத்து கைது செய்து துறையூர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சிண்டு என்கிற சோட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் கூறினார்.துறையூரில் கொலை செய்து விட்டு 18 மாதங்கள் தலை மறைவாக இருந்த வடமாநில கொலையாளியை அதிரடியாக கைது செய்த துறையூர் போலீசாருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்