மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் பிரசித்தி பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவபெருமான் கல்யாண சுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.

திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பல்வேறு சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தில் மாசிமக பெருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி புறப்பாடு,வீதியுலா நடைபெற்றது.9-ஆம் திருநாளான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டு கோயில் வளாகத்தை வலம் வந்து சிறப்பு ஹோமம் மற்றும் மகா பூரணாஹூதி செய்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். மகா தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து வழிபட்டனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்த திருத்தேருக்கு வீடுகள்தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Share this to your Friends