கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…
மாணவர்கள் கல்வி பயிலும் போதே சமூகத்தின் வளர்ச்சி,சமூக நீதி,பண்பாடுகளை அறிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது..
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…
முன்னதாக போட்டிகளுக்கான துவக்க விழா தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி தலைமையில் நடைபெற்றது..
இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா அனைவரையும் வரவேற்று பேசினார்..
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்..
முன்னதாக கல்லூரி மாணவ,மாணவிகளிடையே பேசிய அவர்,தமிழக முதல்வர் மாணவ,மாணவிகளுக்கு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு கூறிய அவர்,மாணவ,மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஒரு தந்தையாக தேர்வுகளை எதிர் கொள்வதற்கு ஊக்கம் அளித்து வருவதை குறிப்பிட்டு பேசினார்…
தொடர்ந்து அவர்,தமிழ் மொழியில் ஆங்கில மொழி கலந்து பேசி வருவதை குறிப்பிட்டு மேடையில் பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…
போட்டியில் தமிழில் தலைப்புகளாக ஒன்றே குலம் ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும் மதவெறி நீங்கட்டும், மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும், ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு, இந்திய சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு, சதிக்கு கால் முளைந்து சாதியானது, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், சமகால ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள், விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு, தமிழர்களாய் உயர்வோம் தமிழ் தலை நிமிர்ந்து நிற்போம், ஆகிய 10 தமிழ் தலைப்புகளிலும் மற்றும் ஆங்கில தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெற்றன..
இதில் கோவை மாவட்டத்தில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்தும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் போட்டிகளுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூபாய்.20,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்பட இருப்பதாகவும்,மேலும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்று மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.25,000 மும் தமிழ் மற்றும் ஆங்கில போட்டிகளுக்கு தனி தனியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்க விழாவில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலை செல்வி,நடுவர்கள்,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…