மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட மன்மதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3875 சதுரஅடி இடத்தில் கண்ணன் என்பவர் பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறார். இவர் 2018-ஆம் ஆண்டுவரை வாடகை நிலுவையின்றி ரூ.2.40 லட்சம் வரவு வைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் சான்று வழங்கியுள்ளனர்.
ஆனால் 2016-ஆம் ஆண்டுமுதல் கோயில் நிலங்களில் குடியிருப்போர் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகை என்ற பெயரில் கண்ணன் ரூ.12.50 லட்சம் வாடகை செலுத்தவில்லை என்று கூறி ஆக்கிரமிப்பாளராக கருதி இடத்தை காலி செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்ணன் வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் ரூ.5 லட்சம் அறநிலையத்துறைக்கு செலுத்தியதாகவும், வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கண்ணன் இடத்தை காலி செய்யாதபட்சத்தில் இன்று (பிப்.20) ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை கையகப்படுத்தப்போவதாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற இன்றைய தினம் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் அடுத்த வாரம் பாதுகாப்பு தருவதாக போலீஸ் தரப்பில் கூறியதால், இன்றைக்கு ஆக்கிரமிப்பை அகற்றுவதாக இருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு வரவில்லை. அதேசமயம், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொருளாளர் துரைராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கண்ணன் கடையின் முன்பு திரண்டு, எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் பட்டாவை மட்டும் வைத்துக் கொண்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என்று வாடகை வசூல் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அறநிலையத்துறை இன்று வராத நிலையில், எப்போது வந்தாலும் அந்த இடத்தை காலி செய்ய அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.