User Comments

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம் 2000-3000 ஆண்டுகள் முற்பட்டதாகும். இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தலத்தில் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருள்கின்றார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்கு கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போதும், முருகன் திருக்கல்யாணத்தின்போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள்.

Share this to your Friends